நீண்ட இழுபறிக்கு பிறகு, பல்வேறு தடைகளைக் கடந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது இயக்குநர் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பத்தில்லை'. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாயிருக்கும் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தயாராகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் 'ஃபிலிம் கம்பானியன் சவுத்' யூடியூப் சேனலுக்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான ஐடியா எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது இப்போது சரியாக நினைவில்லை. இருப்பினும், பொதுவாக ஹாரர் படங்களைப் பொறுத்தவரை, கடவுள் எப்போதும் சக்தி வாய்ந்த ஒருவராகவே காட்சிப்படுத்தபடுவார். இதன்மூலம் கடவுள் கஷ்டப்படுவதற்கான, துன்பப்படுவதற்கான ஸ்பேஸ் இருக்காது. இந்த வகையான காட்சிகள் இங்கே நிரம்பி கிடக்கின்றன. பேயைக் கொல்ல கடவுள் பெரிதாக கஷ்டபடுவதில்லை.
நாம் ஏன் இந்தப் போக்கை மாற்றி அமைக்க கூடாது என நினைத்தேன். அதாவது, பேய்க்கு அதீத சக்தியை கொடுத்து கடவுளுக்கு எதிராக முன்னிறுத்த நினைத்தேன். அப்படியொரு வித்தியாசமான முயற்சிதான் இது. அன்றைக்கு மாதிரி இல்லை. இன்றைக்கு எல்லாமே மாற்றம் கண்டுவிட்டது. இந்த காலக்கட்டத்தில் கடவுள் பூமிக்கு வந்தால் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். படத்தின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல, 'உன்ன விட எங்களுக்கு இங்க அதிகமான சக்தி இருக்கு. நான் மட்டுமல்ல இல்ல. இங்க எல்லாரும் இப்போ மோசமானவங்களாதான் இருக்காங்க' - அது போலத்தான் நம்மளை சுற்றி பல பேய் உலவிக்கொண்டு இருக்கிறது. என் மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. அதை படமாக்க வேண்டும் என்று நினைத்ததேன்" என்றார்.
உங்கள் படங்களில் கிறிஸ்தவத்தின் அடையாளங்கள் அதிகம் இருக்க என்ன காரணம் என்றதற்கு, "நான் அப்படியான சூழலில்தான் வளர்ந்தேன். என் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்களுடன் நான் சர்ச்சுக்கு செல்வேன். அப்படித்தான் வளர்ந்தேன். சிறுவயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சுக்கு அழைத்துச்செல்லப்படுவேன்" என்றார்.
மேலும், படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் ராமசாமி. ராமசாமி என்பது எதும் குறியீடா? அல்லது ராமசாமி என்ற பெயரை கடவுளுக்கு எதிராக முன்னிறுத்தியிருக்கிறீர்களே என்று கேட்கப்பட்டபோது, ஆரம்பத்தில் பதில் சொல்ல தயங்கிய செல்வராகவன், சிறிது நேரம் கழித்து "ஆம்" என்று ஒப்புக்கொண்டார். பெரியாரின் இயற்பெயர் ஈ.வே.ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
- உறுதுணை: Film Companion South