சினிமா

‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்

‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்

webteam

‘சீதக்காதி’ திரைப்படம் வரும் டிசம்பர் வெளியீடப்படும் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 25 ஆவது படம் "சீதக்காதி". இந்தப் படத்தில் இவர் 80 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார். காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

மிகவும் வயதான தோற்றத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் ‘சீதக்காதி’ முதல் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் ‘சீதக்காதி’ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் கையில் வில்லுடன் வேடன் வேடத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 16ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே விஜய் சேதுபதியின் படங்களான ‘96’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் ஒரு படத்தை வெளியிட வேண்டாம் எனப் படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ‘சர்கார்’, 2.0 ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதே ‘சீதக்காதி’யை தாமதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் தகவல் வெளியானது. 

இதனிடையே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி மகிழ்ச்சிகரமான செய்தியொன்றை பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, ‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு என்று தெரிவித்துள்ளார்.