சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் சீமான். இயக்குநராக திரையுலகில் அறிமுகமான அவர், காலப்போக்கில் நடிகராகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி அவரது சினிமா பயணத்தை மீண்டும் பேச வைத்துள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராஜ் பி. ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘சேயோன்’. இதனை ராஜ்கமல் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் சீமான் நடிக்கிறார் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டது.
இன்று அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘சேயோன்’ படத்தில் சீமான் இடம்பெறும் தோற்றமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சீமானின் சினிமா பயணம் நடிகராக அல்ல; இயக்குநராகத்தான் தொடங்கியது. மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், பின்னர் ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’, ‘வாழ்த்துக்கள்’ உள்ளிட்ட போன்ற படங்களையும் இயக்கினார்.
இயக்குநராக இருந்த காலத்திலேயே நடிப்பிலும் அவ்வப்போது தோன்றிய சீமான், ‘பள்ளிக்கூடம்’, ‘எவனோ ஒருவன்’, ‘பொறி’ போன்ற படங்களில் நடித்த சீமான், 2009-ஆம் ஆண்டு வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் அவரது நடிகர் பயணத்தில் முக்கியமான கட்டமாக அமைந்தது.
அரசியலில் முழு நேர கவனம் செலுத்திய பிறகும் சீமான் சினிமாவை முழுமையாகவிட்டு விலகவில்லை. ‘டிராபிக் ராமசாமி’, ‘மிக மிக அவசரம்’, ‘தவம்’, ‘முந்திரிக்காடு’ போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘Love Insurance Kompany’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது ’சேயோன்’ மூலம் நடிகர் பயணத்தைத் தொடர்கிறார். ஒருகாலத்தில் இயக்குநர் சீமான், பின்னர் நடிகர் சீமான், அதன் பிறகு அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படும் சீமான் என அவரது பயணம் பல பரிமாணங்களை கண்டுள்ளது. இப்போது ‘சேயோன்’ மூலம் நடிகர் சீமான் மீண்டும் திரையில் முக்கியத்துவம் பெறுவது, அவரது திரைப்பயணத்தில் இன்னொரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.