விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெறுவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களாக நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் அவரது வீட்டில், சோதனை நடந்து வருகிறது. ஆகவே விஜய் இல்லாமலே ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரி சோதனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வரை சந்தித்துவிட்டு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை நீக்கியதற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
மேலும் தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகனின் தைப்பூசத் திருவிழாவிற்கு அரசுப் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். மலேசிய நாடு கூட தைப்பூசத்திற்கு விடுமுறை விடுகிறது. ஆகவே தமிழக அரசும் விடுமுறை விட வேண்டும் எனக் கோரியுள்ளோம். அரசும் அதற்குப் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது” என்றார்.
அவரிடம் விஜய் வீட்டில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “விஜய்யைவிட அதிகமாக சம்பளம் வாங்குகின்றவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு படத்திற்கு மட்டுமே 126 கோடி ரூபாய், சரக்கு மற்றும் சேவை வரியோடு வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வீட்டிற்கு இவர்கள் ஏன் போகவில்லை? 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். அதையே தேவையில்லை என்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்கிறார். ஆசீஃபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது எங்கே குரல் கொடுத்தார்?
குளிரூட்டி பெட்டியில் மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக அப்பாவையும் மகனையும் அடித்துக் கொன்றார்களே அதற்கு குரல் கொடுத்தாரா? ‘ஜெய் ஸ்ரீராம் போலோ’ எனக்கூறி கட்டி வைத்து தீவைத்தார்களே அதற்கு குரல் கொடுத்தாரா? இது விஜய்யை மிரட்டுவதற்காக செய்கிறார்கள். அவரை அச்சப்படுத்துவதற்காக செய்கிறார்கள். இவர் நல்லவர்? அவர் கெட்டவரா? வரி பாக்கி வைத்தார். கேட்டால் மூன்று வருடம் எனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்கிறார்.
அவரது உடல் ஓய்விற்காக அவர் நடிக்காமல் இருந்தார். வாய்ப்பு இல்லாததாலா அவர் நடிக்காமல் இருந்தார்? வட்டிக்கு விட்டேன் என்கிறார். 18 விழுக்காடு என்றால் அநியாய வட்டி இல்லையா? வட்டிக்கடை முதலாளியை நீங்கள்தான் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என நினைக்கிறீர்கள்”என்றார்.