சினிமா

பிரபல சினிமா கதாசிரியர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

webteam

 ஹிந்தி பட கதாசிரியர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் பட உலகில் மிகப் பிரபலமான கதாசிரியர் ரவிஷங்கர் அலோக். இவருக்கு 32 வயதுதான் ஆகிறது. இவர் மும்பை அந்தேரி பகுதியிலுள்ள ஏழு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று அவர், சற்றும் எதிர்பாராத வகையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குத்தித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அந்தப் பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் நடிகர் நானா படேகர் நடித்த 'அப் டக் சாப்பான்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இறுதியாக இவர் சுதிர் மிஷ்ரா இயக்கிய ‘தாஸ் தேவ்’ படத்தில் அசிஸ்டெண்ட் ரைட்டராக வேலை செய்திருந்தார். இவரது தற்கொலை குறித்து பேசியுள்ள சுதிர் மிஷ்ரா, “நாங்கள் ‘தாஸ் தேவ்’ படத்தில் இணைந்து வேலை செய்தோம். மொத்தம் நான்கு வருடங்கள் போனது அந்த வேலைகள். இப்போதுகூட அவர் எனக்கு போன் செய்திருந்தார். ஆனால் எப்போது பேசினார் என்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை. சில மாதங்கள் இருக்கும். அவர் சொந்தப் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் ‘செவன் பங்களா’வில் தங்கி இருந்தது எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் அவருடைய அண்ணனும் இங்குதான் தங்கி இருப்பதாக கூறியிருந்தார். எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது இந்தச் செய்தியை கேள்விபட்டதும். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இது மிக சோகமான செய்தி” என்று கூறியிருக்கிறார். 

ரவிஷங்கர் அலோக் சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் சிக்கித் தவித்துள்ளார். அதற்கான சிகிச்சையை கூட அவர் எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மதியம் 2 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வீட்டு வாட்ச் மேன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)