ஹர்பஜன் சிங்கிற்கு காமெடி காட்சியை போட்டுக்காட்டிய வீடியோவை நடிகர் சதீஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் தொடர்ந்து வெளியிடும் தமிழ் ட்விட்டர் பதிவுகள் மூலம் அதிகம் பிரபலமானவர். அவரை அறியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. அந்தளவுக்கு பிரபலம். ட்விட்டர் பக்கத்தில் சென்னைத் தமிழ், செந்தமிழ் என ஹர்பஜன் சிங் மாற்றி மாற்றி பதிவிடும் ட்வீட்களால் ‘தமிழ்ப் புலவர்’ என அவரைத் தமிழ் ரசிகர்கள் செல்லமாக குறிப்பிடத் தொடங்கினர்.
ஹர்பஜன் சிங், நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ் ஒன்றில் நவீன திருவள்ளுவர் ஆகவும் நடித்து வரும் ஹர்பஜன் சிங், அதனை அடுத்து தமிழ் சினிமாவில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரியா ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்க உள்ளனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஹர்பஜன் சிங்கிற்கு தனது செல்போனில் ஒரு வீடியோ காட்சியை போட்டுக் காட்டுகிறார். சிவகார்த்திகேயனுடன் சதீஷ் சேர்ந்து நடித்த காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், “சிரிச்சா ஸ்ரீசாந்த் மாதிரி இருப்ப தெரியுமா?’ என்கிறார். அதற்கு, ‘அறைந்தால் ஹர்பஜன் சிங் மாதிரி இருப்பேன் தெரியுமா?’ என்கிறார் சதீஷ். இந்தக் காட்சியைதான் தற்போது ஹர்பஜன் சிங்கிற்கே போட்டுக் காட்டியுள்ளார் சதீஷ்.
இந்தப் பதிவில் சதீஷ், “சிறப்பான ஒரு தருணம். எங்களின் தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ படப்பிடிப்பின்போது” என்று குறிப்பிட்டுள்ளார்.