சினிமா

ஒரே படம்தான்.. ஆனால், 3 கதைகள்!.. ‘காரி’ ஆவது சசிகுமாருக்கு கைக் கொடுக்குமா?-திரைப்பார்வை

webteam

ஆபத்தில் இருக்கும் ஊர், அதைக் காக்க வரும் ஹீரோ இதுவே ‘காரி’ படத்தின் ஒன்லைன்.

சென்னையில் ரேஸில் கலந்து கொள்ளும் குதிரைகளை பராமரிப்பவர் வெள்ளைச்சாமி (நரேன்). அவரது மகன் சேது (சசிகுமார்) குதிரைகளை பயிற்றுவித்து பந்தையத்தில் ஓட்டும் ஜாக்கி. நீதி நியாயம் என ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார் நரேன். அவரை அடக்கிவைத்து பாசத்தால் கட்டிப் போடுகிறார் சசிகுமார். திடீரென நடக்கும் ஒரு துரோகம், அதனால் சசிகுமாருக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இதற்கு பேர்லல்லாக இரு கதைகள் நடக்கிறது. மாவட்டத்தின் குப்பைக் கிடங்காக தங்கள் ஊரை விரைவில் மாற்ற இருக்கிறார்கள் என்பதால் அதைத் தடுக்க போராடுகிறார்கள் காரியூர் மக்கள் ஒரு பக்கம்.

முரட்டுத்தனமான விலங்குகளை கொன்று சாப்பிடும் வினோதமான ஹாபி கொண்ட தொழிலதிபர் எஸ்.ஆர்.கே (ஜே.டி.சக்கரவர்த்தி) இன்னொரு பக்கம். இந்த மூன்று கதைகளும் ஜல்லிக்கட்டு என்ற புள்ளியில் இணைகிறது. ஜல்லிக்கட்டு எதற்காக? யாருக்கும் யாருக்கும் இடையில் நடக்கிறது? வென்றது யார்? இதில் சசிக்குமாரின் பங்கு என்ன? இவை எல்லாம் தான் ‘காரி’ படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பலம், மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்ற படத்தின் மையக்கரு அழுத்தமாக சொல்லப்பட்டிருந்ததும், அதைப் படத்தில் வலுவாக இணைத்திருந்த விதமும் தான். நரேன் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லப்படும் சில விஷயங்கள் அவ்வளவு கச்சிதமாக இல்லை என்றாலும், படம் எதை நோக்கி செல்கிறது என நம்மைத் தயார் செய்ய உதவுகிறது. நடிகர்களாக சசிக்குமார், நரேன், நாகி நீடு, ஜே.டி.சக்கரவர்த்தி, ரெடின் கிங்க்ஸ்லி எனப் பலரும் இருந்தாலும் நம்மைக் கவர்வது நாயகியாக வரும் பார்வதி அருண் மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலும் தான். இவர்களை மையப்படுத்தி வரும் ஒரு காட்சி தான் படத்தின் அடித்தளமே. அது மட்டும் பலவீனமாகியிருந்தால் மொத்தப் படமும் சரிந்திருக்கும். அடுத்த பலம் இசையமைப்பாளர் டி.இமான். அவரது பின்னணி இசை பல இடங்களில் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. சாஞ்சிக்கிவா என்ற பாடலும் கேட்க சிறப்பாக இருக்கிறது.

படத்தின் குறைகள் என்றுப் பார்த்தால், மிகப் பழைய விதத்தில் எழுதப்பட்டு, நாடகத்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள். இடைவேளைக்கு முன்பு வரும் அந்த எமோஷனலான காட்சி தவிர மற்ற அனைத்திலும் பயங்கரமான செயற்கைத் தனம். அதனாலேயே படத்துடன் நாம் ஒன்ற முடியாமல் போகிறது. இதனுடன் சேர்ந்து சசிகுமார் சென்னை பாஷையில் பேசுகிறேன் என்று செய்யும் சோதனைகள், அவருக்கு வைக்கப்படும் தேவையே இல்லாத ஸ்லோ மோஷன் காட்சிகள், எல்லாம் அலுப்பூட்டுகிறது. ஹீரோ இப்படி என்றால் வில்லன் இன்னும் மோசம். முரட்டுத்தனமான மிருகத்தை, தனது டைனிங் டேபிளில் வைக்க நினைக்கும் அவரது கோமாளித்தமான சிந்தனையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் ஃபைன் போட்டுவிடுவோம் என்று படக்குழு கண்டிஷன் போட்டது போல, படம் நெடுக அவர் பேசும் ஆங்கிலத்தை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஊருக்கு நல்லது செய்ய சசிகுமார் போடும் திட்டங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. அதேசமயம் சசிகுமாரின் அப்பா நரேன் இந்த ஊரைவிட்டு போக காரணம் என்ன? சசிகுமார் எப்படி ஸ்விட்ச் ஆன் செய்தது போல ஜல்லிகட்டு வீரராகிறார்? போன்ற சில நெருடல்கள் ஏற்படாமல் இல்லை. மிக மோசம் என்று சொல்லும்படியான படமாக இல்லை. அதே சமயம் மிக கச்சிதமான படமாகவும் இல்லை. ஒரு ஆவரேஜான எண்டர்டென்யராக தப்பிக்கிறது இந்த ‘காரி’.