சினிமா

ஓடிடி திரைப் பார்வை: 'அவள் உடல், அவள் உரிமை' - 'சாராஸ்' என்னும் சுவாரஸ்யமான அவசிய சினிமா!

subramani

மலையாள சினிமாவின் கதை சொல்லும் பாங்கு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. சின்ன விதையை எடுத்து நிழல் தரும் மரமாக கிளை பரப்பிக் காண்பிப்பதில் மலையாள சினிமா 'அடிபொலி'யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'ஜோஜி', 'நாயட்டு', என சமீபத்திய உதாரணங்கள் பல. அந்த வரிசையில் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் 'சாராஸ்' எனும் மற்றொரு மலையாள சினிமாவும் இணைந்து கொண்டது.

பெண்ணிய சிந்தனையினைக் கொண்ட இந்த சினிமா குறித்த பாஸிடிவ் விமர்சனங்கள் தற்போது வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. நாயகி சாராஸ் தாம் ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார். பள்ளி நாள்களில் ஒரு சில மைக்ரோ காதல்களைக் கடந்த அவர் தனது 25-வது வயதில் சந்திக்கும் நபரின் மேல் காதல் வயப்படுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற முடிவுடன் பள்ளி நாள்கள் முதலே வளரும் சரா தன் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற புற அழுத்தங்களுக்கு ஆளாகிறார். அவற்றைக் கடந்து அவர் தனது கனவு சினிவாவை இயக்கினாரா, இல்லையா என்பதே மலருதிர்கால திரைக்கதை.

'விண்ணைத் தாண்டி வருவாயா' சிம்பு ஒரு பெண்ணாக இருந்தால் அவர் என்னென்ன பிரச்னைகளை சந்தித்திருப்பார் என்ற கோணத்திலும் இப்படத்தை நாம் அணுகலாம். உதவி இயக்குநராக வேலை செய்து தன் திறமையை வளர்த்துக் கொள்வது, தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்வது எனத் துவங்கி தன் கனவுப் பாதையில் மிகச் சரியாக முன்நகரும் சராவின் கதா பாத்திரமானது கனவுகளோடு குடும்பங்களைச் சுமக்கும் பெரும்பான்மை இந்தியப் பெண்களின் ஒரு சோறு பதம்.

ஏற்கெனவே 'கும்பலாங்கி நைட்ஸ்', 'கப்பெல்லா', 'ஹெலன்' உள்ளிட்ட சினிமாக்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த அன்னா பென் இப்படத்தில் சரா வின்சென்ட்டாக நடித்திருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த சராவின் கருத்துகளுக்கு ஓகே சொல்லும் காதலன் ஜீவன் திருமணத்திற்குப் பிறகு சராசரி ஆணாக மாறிப் போகிறார். ஜீவன் கதாபாத்திரத்தில் சன்னி வானே சிறப்பாக நடித்திருக்கிறார்.

குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. 'அவள் உடல் அவள் உரிமை'. ஒரு பெண் தான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா அல்லது எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற அனைத்து உரிமையும் ஒரு பெண்ணுக்கே உண்டு என்பதை அனைவருக்கும் புரியும் கமர்ஷியல் பாணியில் இப்படம் விவாதிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஜாது அந்தாணி ஜோசப் அடர்த்தியான இந்தக் கதையினை ஃபீல் குட் மூவியாக மாற்றி அழகான வழங்கி இருக்கிறார்.

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படும் கருத்துகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. சரா தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் டாக்டர் “Better not be a parent... than be a bad parent" என்ற கருத்தை முன்வைத்து பேசும் காட்சி இக்கதையில் முக்கியமானது.

அதுபோலவே 42 வயதில் தனது நான்காவது குழந்தையை கருவில் சுமந்து வந்து நிற்கும் அப்பாவிப் பெண் கதாபத்திரம். சில காட்சிகளே அப்பெண் இப்படத்தில் வருகிறார் என்றாலும் இக்கதைக்கு ஒரு நல்ல மைலேஜ் பூஸ்டராக அவரது கதாபாத்திரம் இருக்கிறது. வழக்கமான குடும்ப சட்டங்களுக்கு சிக்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகையின் கதாபாத்திர மொன்றும் இப்படத்தில் அழகான வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் நீண்டகால சிக்கலான குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற இந்த விஷயம் குறித்து இன்னுமே விரிவாக விவாதிக்கத் தகுதியான வாய்ப்புகள் நிறையவே இருந்தும் இயக்குநர் கொஞ்சம் பின்வாங்கியதாகத் தெரிகிறது. படத்தின் துவக்க காட்சிகள் தரும் உற்சாக உணர்வு போகப்போக நீர்த்துப் போகிறது. ஷான் ரகுமான் இசை காட்சிகளின் தொய்வுகளை தாங்கிப் பிடிக்கிறது.

ஆக, அவசியம் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து நாம் விவாதிக்க வேண்டிய சினிமா 'சாராஸ்'. படக்குழுவிற்கு சபாஷ்.