சினிமா

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: படக்குழுவில் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்: படக்குழுவில் இணைந்த சந்தோஷ் நாராயணன்!

sharpana

பாலிவுட்டில் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கிற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது  ’அந்தாதூன்’ திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்க, நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்நிலையில், அந்தாதூன் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்தாதூன் படத்தில் வரும் வயலின் இசை படம் வெளியானபோது பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. தற்போது, சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசிய படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன்  “அந்தாதூன் படத்தில் இசையமைப்பாளர் அமித் திரிவேதி அற்புதமாக இசையமைத்திருந்தார். தமிழ் ரீமேக்கிற்கு எனக்கு சந்தோஷ் நாராயணன் மட்டும்தான் நினைவுக்கு வந்தார். ஜிகர்தாண்டா படத்திலிருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன். காலா, கபாலி படங்களில் அவரின் இசை என்னை ஆச்சர்யப்படுத்தியது.  படத்திற்காக பிரசாந்திற்கு சந்தோஷ் பியானோ பயிற்சியும் கொடுக்கிறார். ஏற்கனவே, பிரஷாந்த் ஒரு பியானோ கலைஞர்தான். நான்காம் வகுப்பு படிக்கும்வரை பியானோ கற்றுகொண்டுள்ளார். எனவே, அவருக்கு கடினமாக இருக்காது” என்றார்.