சினிமா

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்?

sharpana

அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

’காலா’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக தனுஷுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது. ‘காலா’வில் ‘மாயநதி’, ‘வடசென்னை’யில் ‘என்னடி மாயாவி’, ‘கர்ணன்’ படத்தில் ’தட்டான் தட்டான்’, லேட்டஸ்டாக ‘நேத்து ஓரக்கண்ணால் நான் உன்னை பார்த்தேன்’ பாடல் என தனுஷ், சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் ஹிட் அடித்த பாடல்கள் ஏராளம்.

ஒருபுறம் காதல் பாடல் என்றால் மற்றொருபுறம் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘ரகிட ரகிட’ என குத்து பாடல்களின் ராஜாவாகவும் திகழ்கிறார் சந்தோஷ் நாராயணன். இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் தனுஷ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’அப்போ, காதல் ப்ளஸ் குத்துப்பாட்டு கண்டிப்பா இருக்கும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.


மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.

முன்னதாக, தனுஷ் ‘ராக்கி’, ’சாணிக்காயிதம்’ உள்ளிட்டப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணையவுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இது 1950 ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை என்று சொல்லப்படுகிறது. அருண் மாதேஸ்வரனின் முதல்படமான ‘ராக்கி’ தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் ”ஆமாம். உங்கள் யூகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நான்தான்” என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.