நடிகர் அர்ஜுன், நடிகைகள் அபிராமி மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிப்பில் உருவான பிளாஸ்ட் திரைப்படம், ஆக்சன் திரைப்படமாக இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிளாஸ்ட் திரைப்படத்தின் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன், "படத்தில் நிஜமான ஆக்ஷன் கிங் ஆகவே நடித்திருக்கக் கூடியவர் நடிகை அபிராமி. அவர், சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். மற்றொரு கதாநாயகி பிரீத்தி இதற்கு முன்பு நடனத்தில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அவரது ஆக்சன் திறமையும் வெளிக்காட்டி இருக்கிறார். படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமே படத்தை கடத்தி சென்றிருப்பது அருமை; அந்த அளவிற்கு இயக்குனர் திறன்பட திரைக்கதையை எழுதி இருக்கிறார். மேலும், படத்தின் இசையமைப்பாளர் பின்னணியை இசையை படத்தின் வேகம் குறையாமல் சிறப்பாகவும் அமைத்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நீங்கள் ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்கள் என்பதால், உங்களிடம் இந்த கேள்வி கேட்கிறேன். சனாதனம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ”சனாதனம் என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. திருடக்கூடாது, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என பல்வேறு விஷயங்கள் சனாதனம் போதிக்கிறது. சிறுவயதில் இருந்து நமது பெற்றோர் எவ்வளவு அழகாக நம்மை பார்த்துக் கொண்டனர். அதேபோல், பெற்றோரை அவர்களது முதிர்காலம் கடவுள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சனாதனம் போதிக்கிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் உங்களின் பெற்றோரை வெளியே விரட்டுங்கள்.. அது முடியுமா?” எனத் தெரிவித்துள்ளார்.