சினிமா

'ஸ்டண்ட் சில்வா' - சமுத்திரக்கனி இணையும் 'சித்திரை செவ்வானம்'

'ஸ்டண்ட் சில்வா' - சமுத்திரக்கனி இணையும் 'சித்திரை செவ்வானம்'

JustinDurai
‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அப்பா - மகள் பாசப் பின்னணியில் உருவாகியுள்ள 'சித்திரைச் செவ்வானம்படத்தை, முழுக்க பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளார் இயக்குநர் சில்வா. இப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சண்டை இயக்குநராகப் பல படங்களில் பணிபுரிந்த ஸ்டன்ட் சில்வா இப்படத்தில் அறிமுக இயக்குநராகக் களமிறங்கி இருப்பதும், நடிகை சாய் பல்லவியின் தங்கைதான் பூஜா கண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், '‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்னைகள் தான் கதை. இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.
நடிகை ரீமா கலிங்கல் கூறுகையில், ''முதலில் மாஸ்டர் சில்வாவும், இயக்குநர் விஜய்யும், 'சித்திரைச் செவ்வானம்' படத்திற்காக என்னை அணுகி, போலீஸ் பாத்திரம் என்று சொன்ன போது, நானும் இதை ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்று தான் நினைத்தேன். அப்பா மகளுக்கான ஆழமான உணர்வை சொல்லும் கதையை சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் மாஸ்டர். தமிழ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதை காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநராக தன் திரைப்பயணத்தை துவங்கும் ஸ்டண்ட் சில்வா சாருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக வாழ்த்துக்கள். நன்றி" என்றார்.