சினிமா

கொரோனாவால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றார் நடிகர் சல்மான்கான்!

கொரோனாவால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றார் நடிகர் சல்மான்கான்!

sharpana

கொரோனாவால் தந்தையை இழந்த மாணவரின் படிப்புச்செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் நடிகர் சல்மான்கான்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுக்க கொரோனா  தொற்று பரவத்தொடங்கியது. இதில், அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருந்தார்கள். அதில், முக்கியமானவர் பாலிவுட் நடிகர் சல்மான்கான். கொரோனா காலத்தில் 25,000 சினிமா தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.  சமீபத்தில்கூட,  புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ராக்கி சாவந்தின் அம்மாவுக்கு உதவினார்.

தற்போதுகூட, கொரோனா இரண்டாம் அலையில் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளார்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு உணவு மற்றும் உதவிகளை செய்கிறார். அதேபோல், ஏழை மக்களுக்கு அரிசி,எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொடுத்து உதவி வருகிறார்.

இந்நிலையில் , கொரோனா பாதிப்பால் தந்தையை இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர், ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரினார். அதனைப் பார்த்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ராகுல் கனால், சல்மான் கான் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக, அந்த இளைஞரின் கல்விச் செலவு மற்றும் பொருளாதார உதவிகளை செய்துள்ளதோடு எதிர்கால தேவைக்கான உதவிகளையும் செய்வதாக சல்மான்கான் கூறியுள்ளார்.