சல்மான் கான் pt web
சினிமா

பாலிவுட் சுல்தானின் 30 ஆண்டுகால திரைப்பயணம்.. 60 ஆவது பிறந்த நாள் காணும் சல்மான் கான்..

பாலிவுட்டின் பாய்ஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கானுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள். பாலிவுட்டின் இதயத்துடிப்பாக திகழும் சல்மான் கானின், 30 ஆண்டுகால திரைவாழ்வில் சில பகுதிகளை பார்க்கலாம்.

PT WEB

பாலிவுட்டின் பாய்ஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கானுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள். பாலிவுட்டின் இதயத்துடிப்பாக திகழும் சல்மான் கானின், 30 ஆண்டுகால திரைவாழ்வில் சில பகுதிகளை பார்க்கலாம்.

சல்மான் கான்

இந்திய திரையுலகில் இன்றளவும் ஆச்சர்யத்தின் அடையாளமாக இருக்கும் ஷோலே திரைப்படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான சலீம் கானின் மூத்த மகன் தான் சல்மான் கான். ஆப்கானிஸ்தானை பூர்வீமாகக் கொண்ட சலீம் அலியின் மூத்த மகனாக 1965-ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்தார் சல்மான். இன்று இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்திகளில் ஒருவராக இருக்கிறார். பள்ளிப் பருவத்தில் நடிகை ரேகாவின் தீவிர ரசிகராக இருந்த சல்மான், அவர் நடைப்பயிற்சி செய்யும்போது தனது சைக்கிளில் அவரைப் பின்தொடர்வாராம். பின்னாளில் தனது முதல் படமான 'பிவி ஹோ தோ ஐசி' (Biwi Ho Toh Aisi) படத்தில் அதே ரேகாவுக்குத் தம்பியாக நடித்தார்.

திரைப்பட வாய்ப்பிற்காகப் பல அலுவலகங்களில் அலைந்தபோது, தான் புகழ்பெற்ற எழுத்தாளர் சலீம் கானின் மகன் என்பதை அவர் எங்கும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. 75 ரூபாய் சம்பளத்திற்குப் பின்னணி நடனம் ஆடியது முதல் இன்று ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் உச்சம் வரை அவரது உழைப்பு அபாரமானது. 'மைனே பியார் கியா' படத்தின் மூலம் ஓவர்நைட் ஸ்டாரான சல்மான், ஒரு காலத்தில் வெறும் 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதே தனது லட்சியம் என்று கொண்டிருந்தார். ஆனால், இன்று அவரது சொத்து மதிப்பு சுமார் 2,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அவரது நடிப்பில் வெளியான சாஜன் போன்ற படங்களை இப்போதும் உணர்வுருக கண்டு ரசிக்கலாம்..

திரையுலகில் கட்டுமஸ்தான உடலமைப்பு மற்றும் 'சிக்ஸ் பேக்' கலாசாரத்தைத் தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உண்டு. அதேபோல், சக நடிகர்களுடன், குறிப்பாக ஷாருக்கான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசுவதை அனுமதிக்காத நேர்மையாளர். அவ்வாறான திரைப் போட்டியாளர்களில் ஒருவரான ஷாரூக் கானுடன் இணைந்து 1995-ஆம் ஆண்டு வெளிவந்த கரண் அர்ஜுன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்.

வளர்ப்பு நாய்கள் மீது அளவற்ற பாசம் கொண்டவர். மானை சுட்டுக்கொன்றது, சில நடிகைகளுடனான காதல் என சர்ச்சைகளை கடந்து இப்போதும் முரட்டு சிங்கிளாகவே ரசிகர்களின் கொண்டாட்டத்தில் கலந்திருக்கிறார் சல்மான் கான்.