சினிமா

சாதுக்களை மேற்கிந்திய ஸ்டைலில் நடனம் ஆட வைப்பதா? பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு!

webteam

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, பிரபுதேவா இயக்கியுள்ள ’தபாங் 3’ இந்திப் படத்துக்கு கொடுத்த தணிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்கா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்த இந்தி படம், ‘தபாங்’. அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி, வசூலில் சாதனைப் படைத்திருந்தது. இதில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் சல்மான். இது, தமிழில் சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த சோனாக்‌ஷியே இதிலும் நடித்திருந்தார். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது. 

இதன் மூன்றாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ளார். சல்மான் கான் நடித்த ’வான்டட்’ படத்தை இவர், ஏற்கெனவே இயக்கி இருந்தார். சோனாக்‌ஷி ஹீரோயின். வில்லனாக சுதீப் நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சையீ மஞ்சரேக்கர் (Saiee Manjrekar) அறிமுகமாகிறார். மற்றும் அமோல் குப்தே, மஹி கில் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் சத்தீஷ்கரில் கிளைகளை கொண்ட ’இந்து ஜன்ஜக்ருதி சமிதி’ என்ற அமைப்பு, தேசிய தணிக்கைக் குழுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தோம். அதில் இடம்பெறும் பாடலில் சாதுக்களும் இந்து தெய்வங்களும் மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சாதுக்கள், மேற்கிந்திய ஸ்டைலில் நடனம் ஆடுவது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது. அதனால் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.