சினிமா

''ஒருபோதும் தயங்க மாட்டேன்'' - சீன தயாரிப்புகளுக்கு குட்பை சொன்ன சாக்ஷி அகர்வால்

webteam

சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு கல்வான் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன தரப்பு இந்த தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாகவும், இதன் விளைவாக ஏற்படும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம்தான் நேரடி பொறுப்பு எனவும் சாடியுள்ளது.

ராணுவ வீரர்களில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர்.இந்த சம்பவத்திற்கு பிறகு சீனாவிற்கு எதிராக சில போராட்டங்கள் நடைபெற்றன. சீன பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்கப்போவதில்லை என நடிகை சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ''இந்தியா பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவதை சீனா சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நம் நிலத்தை அபகரிக்க பார்ப்பதாக கூறியுள்ள அவர், சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தக்கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் தொடக்கமாக, டிக்டாக் செயலியில் உள்ள தனது கணக்கை அழித்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். நாட்டின் கண்ணியத்தைக் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதை ஒருபோதும் செய்யத் தயங்க மாட்டேன்'' என சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.