சினிமா

ரசிகர்களின் மனதை வென்றாரா சைரா நரசிம்ம ரெட்டி ? திரை விமர்சனம்

webteam

ஆந்திர மாநிலம் ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்திருக்கும் இந்தப்படம் 200 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா என பலரும் நடித்துள்ளனர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய காலத்தில் நடக்கிறது கதை.

தத்து மண்டலம் எனும் பகுதியில் பல குறுநில மன்னர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் சைரா நரசிம்ம ரெட்டி. ஆங்கிலேயர்களுக்கு கிஸ்தி எனப்படும் வரி செலுத்தி வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நரசிம்ம ரெட்டி ஆங்கிலேய அதிகாரியொருவரின் தலையை வெட்டியதில் துவங்கிய பிரச்சனை பெரிய யுத்தமாக வலுப்பெறுகிறது. குறுநில மன்னர்கள் நரசிம்ம ரெட்டி தலைமையில் ஆங்கிலேயர்களை எப்படி எதிர்த்து போராடினார்கள் என்பது தான் படத்தின் கதை.

வரலாற்றை சினிமாவாக எடுக்கும் போது செய்ய வேண்டிய எந்த மெனக்கெடலும் இப்படத்தில் இல்லை. நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திரப் போராட்ட வீரனின் வாழ்வை பெயரளவிற்கு மட்டும் எடுத்து தன் சொந்த கற்பனையில் அப்பட்டமான மசாலா சாண்ட்விச் தயாரித்து பரிமாறியிருக்கிறார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி.

நாட்டியப்பெண்ணாக வரும் தமன்னாவிற்கும் சிரஞ்சீவிக்கும் காதல் உருவாகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் சிரஞ்சீவிக்கு ஆறுவயதிலேயே திருமணம் நடந்துவிட்டது என்ற உண்மையை அவரது குடும்பத்தார் சொல்ல தமன்னா சிரஞ்சீவியின் காதல் முறிகிறது. நயன்தாரா சிரஞ்சீவியின் வாழ்வில் இணைகிறார். மனித வெடிகுண்டாக மாறி 300 ஆங்கிலேயர்களை தமன்னா கொல்லும் காட்சி தியேட்டரில் அப்லாஸ் அள்ளுகிறது.

தமிழனாகவே தோன்றியிருக்கும் விஜய் சேதுபதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான நரசிம்ம ரெட்டியின் போராட்டத்திற்கு உதவ தத்து மண்டலம் வருகிறார். இரண்டு மூன்று காட்சிகளே வரும் விஜய் சேதுபதி ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்படுகிறார். உண்மையில் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு இந்தப்படம் பெரும் ஏமாற்றம் தான். அமிதாப் பச்சன் என்ற மிகப்பெரிய ஆளுமையை செட் ப்ராபர்ட்டி போல் பயன்படுத்தியிருப்பது அபத்தம்.

சிரஞ்சீவி தவிர திரையில் தோன்றும் எவருக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. யுத்த காட்சிகளின் பதற்றத்தை, இறுதி காட்சியின் அழுத்தத்தை ஒளிப்பதிவு காலி செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அவ்வகையில் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு சற்று ஏமாற்றம் தான்.

கதையில் புதிதாக என்று கூற எதுவும் இல்லை, வழக்கமாக தெலுங்கு சினிமா அரைக்கும் அதே மாவு தான். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. இப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ஏற்கெனவே பல படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் க்ளைமேக்ஸ் காட்சி படத்தின் அத்தனை குறைகளையும் மறக்கச் செய்து உங்களை நிறைவாக அரங்கிலிருந்து அனுப்பிவைக்கும்.

பலநூறு மனிதர்கள், சிலநூறு குதிரைகளை திரையில் காட்டினாலே பிரம்மாண்ட சினிமாவை எடுத்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்காமல் இந்தியா சினிமாவானது இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

புதியதலைமுறை விமர்சனக் குழு