பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை நபர் ஒருவரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறுபுறம், அலிகான் கத்திக்குத்து காயத்திலிருந்து உடல் நலம் தேறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அலிகான் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கிண்டலாய்ப் பதிலளித்திருந்த பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தாலே மன்னிப்பு கோரியுள்ளார்.
தெலுங்கு நடிகர் பாலைய்யாவுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தாலே, டாக்கு மகராஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது அலிகானின் கத்திக்குத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஊர்வசி, ”டாக்கு மகராஜ் படம் வசூலில் 105 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. அதற்காக எனது பெற்றோர் பரிசு தந்தனர். என்றாலும் அதை நான் அணியவில்லை. காரணம் இதை வெளியில் அணிந்து சென்றால் யாராவது தாக்குதல் நடத்தலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
நடிகை ஊர்வசி இப்படி கருத்து தெரிவித்தது இணையத்தில் எதிர்வினையாற்றியது. அலிகானின் ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”அன்புள்ள சயீப் அலிகான் சார்.. உங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். நீங்கள் சந்தித்த பிரச்னையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தேன். டாக்கு மகராஜ் படத்தின் வெற்றியின் மகிழ்ச்சியில் எனக்குக் கிடைத்த பரிசுகளின் உற்சாகத்தில், என்னை மறந்து அப்படி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டேன். அதற்காக வருத்தப்படுகிறேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.