சினிமா

பாலிவுட் படங்களை ஓரங்கட்டி சாதனை புரிந்த 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம்

சங்கீதா

பாலிவுட் படங்களான ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படங்களை காட்டிலும், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பு, 5 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

’பாகுபலி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி. 

1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், படத்தின் பிரம்மாண்டத்தை பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 257.15 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் படங்களான ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் இந்தி பதிப்பு முறியடித்துள்ளது. ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் 13 நாட்களிலும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் 8 நாட்களிலும் 100 கோடி ரூபாய் வசூலித்தநிலையில், 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம்.

பாகுபலி: தி பிகினிங்’, ‘பாகுபலி: தி கன்குளுஷன்’, ‘2.0’ மற்றும் ‘புஷ்பா’ திரைப்படத்திற்குப் பிறகு இந்தி பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்துள்ள 5-வது தென்னிந்தியப் படம் 'ஆர்.ஆர்.ஆர்.' என்பது குறிப்பிடத்தக்கது.