சினிமா

ரூ. 1000 கோடி கிளப்பில் இணைந்த ‘ஆர்ஆர்ஆர்’ - வெற்றிக்கு ராஜமௌலி கூறிய காரணம்

சங்கீதா

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளநிலையில், இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய உள்பட 5 மொழிகளில் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது படத்தின் பிரம்மாண்டமும், கதைக்களமும், சி.ஜி. எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுமே. இதையடுத்து உலகளவில் தவிர்க்கமுடியாத இயக்குநராக ராஜமௌலி உருவாகியுள்ளார். இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளதாவது, “ஒரு கதைசொல்லியின் மிகப் பெரிய ஆசையே, அவர் சொல்கிற கதையை கேட்க அதிக பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்பது தான்.

அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவால் ஒன்றல்ல, இரண்டு படங்கள், 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக நான் நன்றியுள்ளவனாகவும், பணிவானவனாகவும் இருப்பேன். மனித உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பாகுபலி 2’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற திரைப்படங்கள், மொழி, நிலம் ஆகிய எல்லைகளை தாண்டியும், வெற்றிபெறும் என்பதையே இந்தப் படங்கள் வலியுறுத்துகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.