சினிமா

ஜப்பானில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்த ராஜமௌலி - வெளியான தகவல்!

சங்கீதா

ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பிடித்து வந்தநிலையில், தற்போது அந்த சாதனையை ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்ப் படங்களில் ரஜினிகாந்தின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இதனால்தான் ரஜினியின் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில், கடந்த 1995-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ‘முத்து’ திரைப்படம், 1998-ம் ஆண்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தக் காலத்திலேயே அதாவது சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பே ‘முத்து’ படம் அங்கு சுமார் 23.50 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்தியாவில் இருந்து ஜப்பானில் வெளியானப் படங்களில் ரஜினியின் ‘முத்து’ படம் தான் முதலிடம் இடம் பிடித்து சாதனையை தக்கவைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஜப்பானில் வெளியான ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், 53 நாட்களில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 24.10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜமௌலியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.