சினிமா

100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த 'ரெளடி பேபி'.!

sharpana

ஒரு பில்லியன் பார்வையாளர்களைத் தொட்ட தென்னிந்தியாவின் முதல் பாடல் என்ற பெருமையை யுவன் ஷங்கர் ராஜாவின் ரெளடி பேபி பாடல் பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி 2 வில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது. தனுஷ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில், இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க வைரல் ஹிட் ஆனது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாட்டினர் பலர் இப்பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியதே சாட்சி.

கிரீஸில் படமாக்கப்பட்ட ரெளடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். தனுஷ் நன்கு நடனம் ஆடுபவர் என்றாலும், ஒரு டான்ஸ் மாஸ்டருடனேயே (சாய் பல்லவி) நடனம் ஆடினால் அந்தப் பாடல் எப்படி வரும்? என்பதற்கு ரெளடி பேபி பாடலே உதாரணம்.

தனுஷ் சிறப்பாக ஆடினாலும், அழகிய சாய் பல்லவியின் நடனமே நம் கண்களை கொள்ளைக் கொண்டது. அப்படியொரு அசத்தல் நடனத்தோடு தனுஷின் குரலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் ’தீ’யும் குரலும் குத்தாட்டம் போட வைத்தது. இவை எல்லாவற்றையும் விட யுவன் ஷங்கர் ராஜாவின் இசைதான், இப்பாடலுக்கு உயிரோட்டமாக இருந்தது.

இந்நிலையில், ரெளடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை 100 கோடி மக்கள் பார்த்துள்ளார்கள். 4 மில்லியன் லைக்ஸ்களை தொடவிருக்கிறது.

இதனையொட்டி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு. ரெளடி பேபி ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியாகி 9 வது ஆண்டு நினைவு நாளில் 1 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 1 பில்லியன் பார்வையாளர்களைத் தொட்ட தென்னிந்தியாவின் முதல்  பாடல் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் மொத்த அணிக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.