சினிமா

“திரைத்துறையினருக்கு தளர்வுகள் வழங்கக் கோரிக்கை” - ஆர்.கே.செல்வமணி கடிதம்

“திரைத்துறையினருக்கு தளர்வுகள் வழங்கக் கோரிக்கை” - ஆர்.கே.செல்வமணி கடிதம்

webteam

தொழில்துறையினருக்கு நிபந்தனைகளுடன் தளர்வு வழங்கியதை போல திரைத்துறையினருக்கும் தளர்வு வழங்க வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில், தமிழ்த் திரைப்படத் துறையினரின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி 50 நாட்கள் ஆவதால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 17 தொழில்துறையினருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருப்பது போல், திரைப்படத்துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரீ ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 முதல் 50 சதவிகித தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தனி மனித இடைவெளியுடன் தொழிலாளர்களை பணிபுரிய வைக்க முடியும் எனவும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.