ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி PT WEB
சினிமா

"நான் தென் இந்திய அமீர்கான்னா? நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது" - கலகலப்பாகப் பேசிய R.J.பாலாஜி!

webteam

சென்னையில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டட்டாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, "இங்கு நாங்கள் அனைவரும் ஒருவரை மிஸ் பன்றோம். டிரெய்லர் லான்ச்-ன் போதும் அவருடைய பெயரை எங்களால் சொல்ல முடியவில்லை.

இந்தப் படத்தை இடைவேளைக்குப் பிறகு பார்க்கும் போது அதன் தாக்கத்தை உணர முடிந்தது. ‘இப்படி ஒரு நபர் எங்கள் வாழ்க்கையில் வர மாட்டாரா?’ என ரசிகர்களை ஏங்க வைத்ததற்குக் காரணமாக இருந்தவர் அரவிந்த்சாமி சார்தான். அவருடைய பெயரை முதல் முறையாகச் சொல்கிறேன். அவருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இந்த படம் நல்ல வசூல் செய்துள்ளது. இது எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூர் சலூன்

சின்னிஜெயந்தி சார் என்னைத் தென் இந்திய அமீர்கான் என்று சொல்கிறார். அதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. அவர் ஒரு பெரிய லெஜண்ட். சினிமாவில் 40 ஆண்டுகள் சாதனை படைத்தவர். நான் குழந்தை போல... முதல் அடி எடுத்த வைக்கிறேன். தயவு செய்து இப்படிச் சொல்ல வேண்டாம் சார்” என நகைச்சுவையாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்.. “’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். ரத்தம், கத்தி கொண்டு எடுக்கப்படும் வன்முறை படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நாங்கள் இந்தப் படத்தை யாருக்காக எடுத்தோமோ அவர்களை படம் போய் சேர்ந்துவிட்டது” என்றார்.