சினிமா

54 நாட்களில் இத்தனை கோடிகளா?.. வாய்பிளக்க வைக்கும் ’காந்தாரா’ படத்தின் வசூல் ரிப்போர்ட்!

சங்கீதா

குறைந்த பட்ஜெட்டில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தென்னிந்திய சினிமாவை வாய் பிளக்க வைத்துள்ளது.

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. நிலம் மீதான அதிகாரம், சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் அந்த இடத்துக்கான கலைகள், நாட்டார் தெய்வ வழிபாடு ஆகியவற்றையும் இணைத்து கமர்ஷியலான படமாகக் கொடுத்திருந்தார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகாவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கன்னடத்திலே மற்ற மாநிலங்களில் வெளியாகி, வெளியிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. அதனால், மற்ற மொழிகளில் இந்தத் திரைப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ போல் டப் செய்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.

கிஷோர், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை எடுத்திருந்தது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியதுடன் தங்கச் செயின் கொடுத்ததும் தகவல் வெளியாகின. அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன், ‘காந்தாரா’ படத்தில் கதை சொன்ன விதம் உற்சாகப்படுத்தும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், 54 நாட்களாகியும் திரையரங்குகளில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் 16 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

கர்நாடகாவில் மட்டுமே 168.5 கோடி ரூபாயும், இந்தியில் 96 கோடி ரூபாயும், தெலுங்கில் 60 கோடி ரூபாயும், கேரளாவில் 19.2 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 12.70 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் மட்டும் 44 கோடி ரூபாயும் வசூலை ஈட்டி பட்டையை கிளப்பியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய ஒரு படம், இந்தளவு வசூலை ஈட்டியுள்ளதால் கன்னட திரையுலக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.