சினிமா

பாலியல் விவகாரத்தில் நடிகைக்கும் பொறுப்பா? மம்தா, ரீமா கடும் மோதல்!

பாலியல் விவகாரத்தில் நடிகைக்கும் பொறுப்பா? மம்தா, ரீமா கடும் மோதல்!

webteam

கேரள நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகைகள் மம்தா மோகன்தாஸ், ரீமா கல்லிங்க ல் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப் பட்டார். இந்நிலையில் நடிகைகளின் பாதுகாப்புக்காக கேரளாவில் சினிமா பெண்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகை மம்தா மோகன்தாஸ் இடம்பெறவில்லை. 

சமீபத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக ’அம்மா’ அறிவித்தது. இதற்கு சினிமா பெண்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘அம்மா’வில் இருந்து விலகுவதாக சில நடிகைகள் அறிவித்தனர். இந்தப் பிரச்னை கடும் சிக்கலை ஏற்படுத்தியதை அடுத்து, நடிகர் திலீப், ‘குற்றமற்றவன் என்பதை நிரூபித்துவிட்டு ’அம்மா’வில் சேர்கிறேன்’ என்றார். அதை அம்மா ஏற்றுக்கொண்டதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த நடிகை மம்தா மோகன்தாஸ், ’நான் வெளிநாட்டில் இருந்தபோது சினிமா பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதால் அதில் இணையவில்லை. அதற்கு நான் எதிரானவள் இல்லை என்றாலும் அந்த அமைப்பு மீது எனக்கு எந்த கருத்தும் இல்லை. நடிகைகள் பாதிக்கப்படும்போது அதற்கு அவர்களும்தான் காரணம். அவர்களுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை அவர்களே உருவாக்கிக் கொள்வதாக நினைக்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

இது சர்ச்சையை கிளப்பியது. நடிகை ரீமா கல்லிங்கலும் அவர் கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு ஆகியோர், மம்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரீமா முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில், ’பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ, நீங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்பவர்களைப் பாதுகாக்கும் சமூகமும் உலகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் அவர்களை அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் இணைந்து குரல் கொடுப்போம். அமைதி மற்றும் அறியாமையின் சுவரை உடைத் தெறிவோம்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா, ‘நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எந்த பெண்ணோ, சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை நல்லெண்ணம் கொண்ட யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு என்று நான் கூறியது, என் சொந்த அனுபவத்தில் இருந்து. இந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ள முடியாது. சினிமா பிரபலங்கள் என்றால் மட்டும் குரல் கொடுக்கும் நீங்கள், சாதாரண மக்கள் இப்படியொரு கொடுமைக்கு உள்ளாகும்போது ஏன் குரல் கொடுப்பதில்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதைப் புரிந்துகொண்டவர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.