யகொண்டனநாகார்ஜுனா நடிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கி 1989ல் வெளியான படம் `சிவா'. இப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, இன்று வரை கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவின் முகத்தையே மாற்றிய படமாகவும் இடம்பிடித்தது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, `சிவா' படத்தை டிஜிட்டலாக மாற்றி நவம்பர் 14 ரீ ரிலீஸ் செய்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா மற்றும் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசிய போது "இந்தப் படத்தை இப்படி ஒரு கல்ட் ஹிட்டாக்கிய தெலுங்கு மக்களுக்கு பெரிய நன்றி. உங்கள் தாத்தா, அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் அவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்து ஹிட்டாக்கினர். அவர்களுக்கு முதல் நன்றி. இப்போது கூட நீங்கள் அதே எனர்ஜியை இங்கு வந்திருக்கிறீர்கள் அதற்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் மேல், நான் நன்றி சொல்லவேண்டியது என் நண்பன் ராம் கோபால் வர்மாவுக்கு. 36 வருடங்களுக்கு முன் இப்படத்தை எடுத்து, என்னை பெரிய ஸ்டாராக மாற்றினான். இந்த ரீ ரிலீஸுக்காக ராமு கடந்த ஆறுமாதங்களாக மிகுந்த காதலுடன் உழைத்திருக்கிறான். இப்படத்தை இன்று காலையில் பார்த்தேன். படத்தின் சவுண்ட் பெரிய வியப்பை கொடுத்தது. இப்போது என்னுடைய படங்களில் ஏன் இப்படியான சவுண்ட் வருவதில்லை என கேள்வி எழுந்தது. முன்பு மோனோவில் கேட்ட சவுண்ட் மொத்தம், இப்போது நீங்கள் டால்பியில் கேட்டு அசர போகிறீர்கள். `சிவா' எப்போதைக்குமான படம். இன்னும் 36 வருடங்களுக்கு பிறகு இதே மேடையில் சிவாவின் இன்னொரு ரீ ரிலீஸுக்காக டிரெய்லர் வெளியிடும் சூழல் வந்தாலும் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்" என்றார்.
அவரை தொடர்ந்து ராம் கோபால் வர்மா பேசிய போது "35 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் எடுத்த படத்திற்காக மீண்டும் ஒருமுறை மேடையில் நிற்கிறோம். இதை நாங்கள் அன்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அன்று நான் இந்தப் படத்தை துவங்கிய போது, படத்தின் தொழிநுட்பம் ரீதியாக நிறைய சுதந்திரத்தை நாகார்ஜுனா கொடுத்தார். ரீ ரிலீஸுக்காக இப்படத்தின் சவுண்ட் டிசைன் பணிகளுக்கு மட்டும் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். அதே சுதந்திரத்தை மீண்டும் 36 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜுனா கொடுத்தார். வழக்கமாக ரீமாஸ்டரிங் என்றால் அதில் வழக்கமான நடைமுறை, ஏற்கெனவே உள்ள டிராக்குகளை வைத்து மெருகேற்றுவார்கள். ஆனால் மொத்த சவுண்டையும் மீண்டும் உருவாக்கி இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அன்று `சிவா' சவுண்ட் டிசைனை தாமோதர் செய்தார். இப்போது இந்த ரீ ரிலீஸுக்கு புது சவுண்ட் டிசைனை செய்தது அவரது பேரன். அவருடைய தாத்தாவை விட சிறப்பான வேலையை செய்திருக்கிறார். நாகார்ஜுனா தொழிநுட்பங்களை நம்பினார். அன்றைய சினிமாக்களில் இருந்து வித்தியாசமான ஒன்றை நான் செய்வேன் என நம்பினார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அந்த வேலைகளை திரும்ப செய்ய AI பயன்படுத்தினேன். 35 வருடங்களுக்கு முன்பு மோனோ டிராக்கில் பதிவு செய்தது, இப்போதைய தியேட்டர் சவுண்ட் சிஸ்டத்தில் கண்டிப்பாக வேலை செய்யாது. எனவே AI பயன்படுத்தி புதிய தொழிநுட்பங்களை கொண்டு மொத்தமாக புதிதாக செய்திருக்கிறோம். இப்போது வரக்கூடிய ஸ்லோமோஷன் சண்டைகளுக்கு மத்தியிலும் சிவாவின் உள்ள சண்டைகள் பார்க்கும் போது புதிதகாவே இருக்கிறது. என்னுடைய அப்பா எனக்கு உடல்ரீதியான பிறப்பை கொடுத்தார். என்னுடைய கேரியரில் பிறப்பை கொடுத்தது நாகார்ஜுனா" என்றார்.