சினிமா

தியேட்டர்ல மட்டுமில்ல... ஓடிடியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் `வாரிசு’, `துணிவு’?

சங்கீதா

விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள், திரையரங்கு மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி ஒன்றாக விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியானது. இதில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 9 நாட்களில் 234.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேநேரத்தில், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், 9 நாட்களில் 163.4 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. சொல்லப்போனால் இருப் படங்களுமே வசூலை வாரிக் குவித்து வருவதால், தமிழ் திரையுலகம் கொண்டாட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், திரையரங்கைப் போல் ஓடிடி தளத்திலும் இருப் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் ‘வாரிசு’ படத்தை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கிருப்பதாகவும், அஜித்தின் ‘துணிவு’ படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படும் நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி இந்த இருப்படங்களும் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.