இந்தி நடிகை சன்னி லியோன், ஆணுறை விளம்பரம் ஒன்றில் கிளாமராக நடித்துள்ளார். இந்த விளம்பரங்களின் போஸ்டர் கோவா மாநில பேரூந்துகளில் ஓட்டப்பட்டிருக்கிறது. இது ஆபாசமாக இருப்பதாகக் கூறி பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். இருந்தாலும் அந்த விளம்பரத்தை பேரூந்துகளில் இருந்து நீக்க, அரசு முன் வரவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரான்சிஸ் சில்வீரா இந்தப் பிரச்னையை கோவா சட்டசபையில் கிளப்பினார். ‘கோவா அழகான பிரதேசம். சுற்றுலா தளம். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மாதிரியான இடத்தில் இது போன்ற விளம்பரங்களை அரசு பேரூந்துகளில் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது’ என்று கூறினார். இதையடுத்து இந்தப் பிரச்னை மேலும் பரபரப்பானது.
இதுபற்றி கோவா போக்குவரத்து அமைச்சர் சுதின் தவாலிகர் கூறும்போது, ‘அந்த விளம்பரங்களை நீக்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் போக்குவரத்து நிறுவன எம்.டியிடமும் பேசியிருக்கிறேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற விளம்பரங்கள் பேரூந்துகளில் இடம்பெறக் கூடாது என்று கூறியிருக்கிறேன்’ என்றார்.