இணையத்தில் சட்டவிரோதமாக புதிய திரைப்படங்களை வெளியிட்டு வந்த அட்மிகள் இருவரது புகைப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் அந்தப்படங்களை சட்டவிரோதமாக சில இணையதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இதனால், திரைத்துறையினர் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற விஷால் பைரசியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் அவருக்கு தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று விஷால் நடித்த துப்பறிவாளன் படம் வெளியானது. நேற்றே தமிழ்கன், தமிழ் ராக்கஸ் ஆகிய இணையதளங்களில் இப்படம் பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் விஷால் பிலிம் பேக்டரியும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றும் இணையதளங்களின் இரு அட்மின்களான அரவிந்த் லோகேஸ்வரன், டிக்ஸான் ராஜ் ஆறுமுக சாமி ஆகிய இருவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இருவரும் தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் இணையதளத்தின் அட்மிகள் எனத் தெரிய வந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மினான அரவிந்த் லோகேஷ் சுவிட்சர்லாந்த்தில் இருப்பதும், தமிழ்கன், தமிழ்டிபாக்ஸ் அட்மினான டிக்ஸான் ராஜ் கனடாவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களை பற்றிய தகவல்கள் அறிந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு piracy@tfpc.org இந்த இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம். தகவல்கள் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானமும் அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.