வரும் வெள்ளிக்கிழமை 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில வருடங்களாக அதிகமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு டிஜிட்டலின் வருகைதான் காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக, குறைந்த செலவில் படங்களை எடுத்துவிட முடிகிறது. ஆனால், ரிலீஸ் செய்வதில்தான் சிக்கல். சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (22-ம் தேதி) அன்று 11 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
’பயமா இருக்கு, நெறி, நான் ஆணையிட்டால், ஆயிரத்தில் இருவர், போலீஸ் ராஜ்ஜியம், வல்லதேசம், களவுத் தொழிற்சாலை, தெரு நாய்கள், கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவா கத்தி, காக்கா ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சில படங்களின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்படலாம்’ என்று வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.