நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
மீகாமன், தடையறத்தாக்க, தடம் போன்ற க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் மகிழ்திருமேனி பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
அதன்படி வெளியான படத்தின் டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரண்டு மடங்காகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீயாக பேக்ரவுண்ட் இசையில் அனிருத் மிரட்டியிருக்கும் சூழலில், வெளியான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல்களும் டிரெண்டிங்கில் சம்பவம் செய்துவருகின்றன.
இந்நிலையில் படமானது வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு பின் தள்ளிப்போன நிலையில், பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என டிரெய்லர் அறிவிப்புடன் கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகா, தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரெட் ஜெயண்ட் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி விநியோகஸ்தர் உரிமையையும் பெற்றுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.