நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது தனிப்பட்ட உரையாடல்களை தவறாகப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் இணையவாசிகளை கடுமையாக எச்சரித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு எதிரான தாக்குதல்களை பொறுத்துக்கொண்டாலும், தற்போது தனது குடும்பத்தினரையும் பாதிக்கும்போது, இனி பொறுமை காட்ட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்திற்குள் அவதூறு பதிவுகளை நீக்காவிட்டால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், தனது தனிப்பட்ட உரையாடல்களின் சிறு பகுதிகள் திருத்தப்பட்டு, தவறான நோக்கத்தில் பரப்பப்படுவதாக நடிகை ராஷ்மிகா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த எட்டு ஆண்டுகளாக ஊடகங்களின் ஒரு பிரிவினராலும், இணையத்தில் சிலராலும் தான் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாகவும், இது தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெறும் வியூஸ் (Views), ரீச் (Reach) மற்றும் என்கேஜ்மென்டுக்காக (Engagement) தான் சொல்லாத வார்த்தைகளையும், தவறான தகவல்களையும் பரப்பி வருவது கவலைக்குரியது. இதுவரை பொதுவாழ்க்கையின் ஒரு பகுதியாக இதைப் பொறுத்துக்கொண்டாலும், கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வு எல்லை மீறிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி (Rakshit Shetty) உடனான தனது நிச்சயதார்த்தம் முறிந்த காலத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தனது தாயாருடன் பேசிய ஆடியோக்களை, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இன்றித் தற்போது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கப் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பழைய உரையாடல்களை, தனது தற்போதைய திருமண வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திச் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும், இது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தேவையில்லாத சங்கடங்களுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் ராஷ்மிகா (Rashmika) ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது முழுக்க முழுக்கத் தனியுரிமையின் மீதான தாக்குதல் என்று கூறிய அவர், "கடந்த 8 ஆண்டுகளாகத் தாக்குதல்கள் என் மீது மட்டும் இருந்தபோது அமைதி காத்தேன். ஆனால் இன்று அது என் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளையும் பாதிக்கும்போது நான் அமைதியாக இருக்க முடியாது. இனி பொறுமைக்கு இடமில்லை. சர்ச்சைக்குரிய அந்த உள்ளடக்கங்களைப் பதிவிட்டுள்ள ஊடகங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) மற்றும் தனிநபர்கள், அந்தப் பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் அவர்களுக்குச் சட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்படும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தனக்கு எளிதானது அல்ல என்றாலும், தற்போதைய சூழலில் இது அவசியமானது என்று அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.