சினிமா

‘பிரம்மாஸ்திரா’ படத்தால் மீண்டெழுந்த பாலிவுட் - 2 நாட்களில் ரூ. 160 கோடி வசூல்

சங்கீதா

பாய்காட் ட்ரெண்டிங்கை மீறி ரன்பீர் கபூர் - ஆலியா பட்டின் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான இரண்டு நாட்களிலேயே 160 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்துள்ளது.

கொரோனா காலக்கட்டம், சுஷாந்த் சிங் மர்ம மரணம், நெப்போட்டிசம், போதைப் பொருள் புழக்கம், இந்துக்களுக்கு எதிரான கருத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தன. மேலும் தென்னிந்திய திரைப்படங்களின் ஆதிக்கமும் பாலிவுட்டில் அதிகரித்தது. குறிப்பாக ‘புஷ்பா’, கே.ஜி.எஃப். 2’ உள்ளிட்ட தென்னிந்தியப் படங்கள் பாலிவுட் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தன.

இதனால் பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அந்தவகையில், அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’, அக்ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘ரக்ஷாபந்தன்’, ரன்பீர் கபூரின் ‘ஷம்ஷெரா’, விஜய் தேவரகொண்டாவின் பாலிவுட் அறிமுகப் படமான ‘லைகர்’ ஆகியப் படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் பாலிவுட் திரையுலகத்தின் வியாபாரம் படுபாதாளத்துக்கு சென்றது. #BoycottBollywoodCompletely என்ற ஹேஷ்டேக்கும் படங்கள் வெளியாகும்போதெல்லாம் ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், நாகர்ஜூனா, டிம்பிள் கபாடியா, ஷாரூக்கான் (சிறப்புத் தோற்றம்) ஆகியோர் நடிப்பில் உருவாகி, கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையடுத்து முதல் நாளில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்துள்ளது. இரண்டு நாட்களில் சுமார் 160 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் வார நாட்களில் வெளியாகி, அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையையும் ‘பிரம்மாஸ்திரா’ பெற்றுள்ளது.

அயன் முகர்ஜி இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ், ஸ்டார் ஸ்டூடியோஸ், பிரைம் போக்கஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. திரைக்கதை வலுவாக இல்லையென்றாலும், சிஜி பணிகள் அதிகமாக காணப்படுவது படத்திற்கு பாசிட்டிவ்வாக அமைந்துள்ளதால், வருகிற நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.