திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாவாக நடிக்க இருப்பதாக நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
’பாகுபலி’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து வரலாற்றுப் படங்களில் நடித்துவருகிறார் ராணா. ’காஸி’ என்ற பீரியட் படத்துக்குப் பிறகு சத்ய சிவா இயக்கும் ’1945’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் பற்றிய கதை. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து மீண்டும் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாவாக அடுத்து நடிக்கிறேன். கே.மது இயக்கும் இந்தப் படத்தின் கதையை ராபின் திருமலா எழுதுகிறார். படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் கதை உள்ளிட்ட மற்ற விஷயங்களை சொல்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.