சினிமா

இந்தியா திரும்பும் நடிகர் ராணா மும்பையில் தங்க திட்டம்!

இந்தியா திரும்பும் நடிகர் ராணா மும்பையில் தங்க திட்டம்!

webteam

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் நடிகர் ராணா சில காலம் மும்பையில் தங்கி இருக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகுபலி, ருத்ரமாதேவி, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் ராணா. இந்தியிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.இந் நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளம்பரத்துக்கான புகைப்படம் ஒன்றை சில நாட்களுக்கு முன் அவர் பதிவிட்டார். அதில், உடல் எடையை குறைத்து நம்ப முடியாதபடி ஒல்லியாக இருக்கிறார் ராணா.

இதையடுத்து ரசிகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினர். ஒரு ரசிகர், ‘பல்வாள் தேவா, என்னாச்சு உடம்புக்கு? ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கீங்க?’ என்று கேட்டுள்ளார். மற்றொருவர், ‘நோயாளி மாதிரி தெரியறீங்க... நல்லா இருக்கீங் கள்ல?’ என்று விசாரித்துள்ளார். ‘ஓ மை காட், என்னாச்சு உங்களுக்கு?’ என்று ஒருவர் விசாரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும் அதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. ’அது வெறும் வதந்திதான். இதுபோன்ற யூகங்கள் போரடிக்கிறது’ என்று தெரிவித்திருந்த ராணா, எதற்காக உடல் எடையை குறைத்தார் என்று தகவலைத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஒல்லியாக இருப்பது போல் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ராணா, தெலுங்கில் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் அவர் உடல் எடையை குறைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியவரும்.

இந்நிலையில், 4 மாதமாக அமெரிக்காவில் இருக்கும் ராணா, இன்னும் 72 மணி நேரத்தில் இந்தியாவில் இருப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இந்தியா வந்ததும் ஐதராபாத்துக்குப் பதிலாக மும்பையில் சில காலம் தங்கியிருப்பார் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் சகோதரி லட்சுமி (நடிகர் நாக சைதன்யாவின் தாய்)யும் ராணாவுடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களும் ராணா பற்றி எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.