சினிமா

அரசியல் நையாண்டியுடன் மண்வாசம் கமழும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ - விமர்சனம்.!

subramani

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்கிற சினிமா அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கம் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி இருக்கிறார்.

தன் வீட்டில் குழந்தை போல வளர்க்கும் இரண்டு மாடுகள் ரம்யா பாண்டியன் திருமணம் செய்து போகும் போது அவருக்கு சீதனமாக வழங்கப்படுகிறது. ரம்யா பாண்டியனின் கணவர் குன்னிமுத்துவாக வரும் மிதுன் மாணிக்கத்திற்கும் அந்த மாடுகள் மீது ரொம்பவே பிரியம். தம்பதிகள் வளர்க்கும் மாடுகள் இரண்டும் தொலைந்து போகிறது. பிள்ளை போல வளர்த்த மாடுகளை அவர்கள் தேடிக் கண்டு பிடித்தார்களா...? இல்லையா...? என்பதே திரைக்கதை. குன்னி முத்துவின் நண்பனாக கோடாங்கி வடிவேல் முருகன் வருகிறார். படத்தின் முதல் பாதியை தனது நக்கல் நையாண்டி மூலம் கலகலப்பாக எடுத்துச் செல்கிறார் கோடங்கி வடிவேல் முருகன்.

தொலைந்த மாடுகளை கண்டு பிடிப்பது என்ற ஒற்றை வரிக்குள் கதையை அமைத்து அனைத்து அரசியல் கட்சிகளையும், சமகால இந்தியாவையும் தாறுமாறாக விமர்சித்திருக்கிறார் இயக்குநர் அரிசில் மூர்த்தி. சிவகங்கைப் பகுதியில் இப்போதும்கூட பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஊர்களான கல்லல், கீழப்பூங்குடி, பூச்சேரி ஆகிய பகுதி மக்களின் மொழிவழக்கை வாழ்வியலை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். “இந்தியால எந்த பேங்குலயும் பணம் இல்லையாம், நாலஞ்சு பயக வழிச்சு எடுத்துட்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போயிட்டாய்ங்களாம்.” “வெள்ளக்காரனப் போல இந்த கார்ப்பரேட் காரன் வந்துட்டான். வறுமைக்கு திருடின காலம் போயி இப்ப வறுமைய திருடுறாய்ங்க.” போன்ற வசனங்களுக்கு பாராட்டுகள். “ஒரு ஊரணி தண்ணிக்கு போனாளாம் ஒம்பது ஊரணிக்கு தொனைக்கு போனாலாம்.” போன்ற கிராமத்து சொலவாடைகள் ரசிக்க வைக்கின்றன.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு அருமை. கிரிஷ் தன் அறிமுக இசை மூலம் நல்ல கவனத்தைப் பெறுகிறார். பத்திரிக்கையாளராக வரும் வாணி போஜன், கோடங்கி வடிவேல் முருகனின் எதார்த்த நகைச்சுவை, ரம்யா பாண்டியனின் அருமையான நடிப்பு, மிதுன் மாணிக்கத்தின் வெகுளித்தனமான இயல்பு, அப்பத்தா லக்‌ஷ்மியின் கிராமத்து நையாண்டி, தனியாளாக நீர்நிலையினைத் தூர்வாறும் தாத்தா கதாபாத்திரம் என படத்திற்கு பல விசயங்கள் பலமாக அமைகின்றன.

மாடுகளைக் கண்டுபிடித்தல் என்ற மையக் கோட்டிலேயே நின்று முழு திரைப்படமும் அரசியல் பேசியிருந்தால் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ இன்னுமே தனித்துவம் பெற்றிருக்கும். ரேஷன் கடை பிரச்னை, கிராம பராமரிப்பு, பள்ளிக் கூடம், டாஸ்மாக் என அனைத்தையும் விமர்சித்து பல்முனைத் தாக்குதலில் இயக்குநர் ஈடுபட்டதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

அவசியம் பார்க்க வேண்டிய சமகால அரசியல் சினிமா ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’.