நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட இருப்பதாக கர்நாடகாவில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழில், ’நான் ஈ’, ’புலி’ படங்களில் நடித்தவர் கன்னட ஹீரோ சுதீப். இவரை அரசியலுக்கு இழுக்க, கர்நாடகாவில் கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் இவர், ஜனதா தளம் (எஸ்) தலைவர் ஹெச்.டி குமாரசாமியை சந்தித்தார். இது அப்போது பரபரப்பானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவர் வீட்டில் பிரபல சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக அரசியல் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அப்போது காங்கிரசில் வந்து சேருமாறும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுமாறும் சுதீப்பிடம் சித்தராமையா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நடிகை திவ்யாவும் சுதீப்பை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம்.
சுதீப்புக்கு சித்ரதுர்கா மாவட்டத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மொலகால்மரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுதீப் களம் இறங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சுதீப் தரப்பில் கூறும்போது, ‘இந்த கேள்விக்கு பதில் சொல்லி சுதீப் சோர்ந்துவிட்டார். அவருக்கு அரசியலில் சேரும் எண்ணமில்லை. எல்லாம் வதந்திதான்’ என்று தெரிவித்தனர்.