நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடித்து தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆன படம் ` 'ராமாயணா'. நமித் மல்ஹோத்ரா தயாரித்த இந்தப் படம் திரையரங்கில் பெரிய வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவானதால், உலகளவில் 1900+ கோடி வசூல் செய்த போதும் இந்தப் படம் நஷ்டம் என தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் "இந்தப் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால், வணீக ரீதியில் இப்படம் தோல்வி எனக் கூறுகிறார்களே?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நமித் "இந்தப் படத்தின் பட்ஜெட் மீது பலரும் ஆர்வமாக இருப்பதை நான் அறிவேன். நான் ஒரு கேள்வி கேட்கிறேன், தாஜ்மகால் இந்தியாவின் அழகான வரலாற்று சிறப்பு மிக்க இடம். அதை உருவாக்க என்ன செலவானது? குதூப் மினார் கட்ட என்ன செலவானது? இவை எல்லாம் விலைமதிப்பற்றவை. நான் ஒரு படம் எடுக்கும் போது அதில் நிறையவே முதலீடு செய்திருக்கிறேன். நான் ஒவ்வொரு நபர்களிடமும் சொல்ல விரும்புவது இதுதான், இது ராமாயணம், அதனை பணத்தை வைத்து அளவிடாதீர்கள். இன்று இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் அன்பும் கிடைத்துள்ளது. எங்களுக்கு லாபமும் கிடைத்துள்ளது. எனவே இன்னும் இது போன்ற படங்களை எடுக்க எனக்கு தைரியம் வந்திருக்கிறது.
விமர்சகர்கள் மிகவும் அன்பானவர்கள். ஆனால் அவர்களுக்கு வணிகம் என்ன என்பதே தெரியாது. என்னுடைய நிறுவனம் Prime Focus. அது இந்திய பங்குச்சந்தையில் இடம்பெற்றிருக்கிறது. அதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி. ஆனால் இவர்களுக்கு என் நிறுவனத்தின் லாபம் என்ன? வருடாந்திர வருமானம் என்ன? எதுவும் தெரியாது. அவர்கள் படத்தில் உள்ள விஷயங்களில் கருத்து கூறலாம். திரைப்படங்களை ஆராய்வதில் விமர்சகர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் வியாபாரம் குறித்த அவர்களின் அறிவுக்கு நான் 5-க்கு 0 மதிப்பெண் தான் கொடுப்பேன்.
மக்கள் இந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பது தான். இரண்டாவது பாகத்தை 2028 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் இன்னும் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறோம். அதற்கான வணீக திட்டமிடல்கள் நடைபெற்று வருகிறது. படத்தின் வருவாய் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரே பதில் தான். ராமரின் ஆசியுடன், எந்த நஷ்டமும் இல்லாமல், இப்போது எங்களுக்கு லாபம் கிடைக்க துவங்கிவிட்டது.
ராமாயணத்தை GTA போல ஒரு சிறப்பான வீடியோ கேம் ஆக உருவாக்கும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைகளும் GTA விளையாடுவதை போல ராமாயணம் கேமை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதன் மூலம் ராமாயணத்தை பற்றி அவர்கள் கற்க முடியும்." எனக் கூறியுள்ளார்.