சினிமா

’சே. பிரபாகரன் ரெபரென்ஸ்’..‘இனிமேதான் எங்கள் ஆட்டம் ஆரம்பம்’ - ராமராஜனின் சாமானியன் டீசர்!

webteam

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திநகர் கிருஷ்ணாவேனி திரையரங்கில் நடிகர் ராமராஜன், 10 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

80-களின் இறுதியில் இருந்து, 90-களின் தொடக்கம் வரை பரபரப்பான ஹீரோவாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது படங்கள் வெற்றிபெற்று வந்தது. இவருடைய படத்தை தயாரித்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வரவேற்பு குறையத் துவங்க சினிமாவில் இருந்து விலகினார்.

அதன்பின் அரசியலில் தீவிரமாக இயங்கி வந்தார். அவ்வப்போது வரும் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திர வாய்ப்புகளையும் மறுத்து, நடித்தால் ஹீரோதான் என்ற உறுதியுடன் இருந்தார். இப்போது அவரது முடிவுக்கு ஏற்ப மீண்டும் ஒரு படத்தில் ஹூரோவாக களம் இறங்குகிறார். படத்திற்கு 'சாமானியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நரேன், மீனா நடித்த 'தம்பிக்கோட்டை' படத்தை இயக்கிய ராஹேஷ் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ராதா ரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இது ராமராஜன் நடிக்கும் 45-வது படமாக உருவாகிறது.

இந்நிலையில், சாமானியன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ராதாரவி இஸ்லாமியர் போன்ற தோற்றத்திலும், எம்.எஸ்.பாஸ்கர் இந்து மத பின்னணி கொண்ட தோற்றத்திலும் இருக்கின்றனர். அநேகமாக ராமராஜன் கதாபாத்திரம் கிறிஸ்துவ கதாபாத்திரமாக இருக்க வேண்டும். அதாவது மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் இணைந்து ஒரு வேளையை செய்வதுபோல் கதை எழுதப்பட்டிருக்கலாம். டீசரின்படி இந்த மூவரும் ஒரு நூலகத்திற்கு செல்கின்றனர். அனைவரும் கைகளில் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். ராமராஜன் முதலில் நூலக ரேக்கில் இருந்து சேகுவேரா புத்தகம் ஒன்றை எடுக்கிறார். பின்னர், மேஜையில் அமர்ந்திருக்கும் போது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று உள்ளது.

அந்த நூலகத்தின் பொறுப்பாளராக மைம் கோபி நடித்துள்ளார். டீசரே மைம் கோபி போலீசுக்கு போன் செய்வது போல்தான் தொடங்குகிறது. வயதான மூவர் நூலத்திற்குள் நுழைந்து வெளியே செல்லாமல் இருப்பதாகவும், தன்னையும் வெளியே விடாமல் இருக்கிறார்கள் எனவும் சொல்கிறார். மூவரின் மத அடையாளங்களை குறிப்பிடு போலீசிடம் சொல்கிறார். மைம் கோபி தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கிறார். இறுதியில் மைம் கோபியை மூவரும் சுட்டுக் கொல்கின்றனர். உங்கள் ஆட்டம் முடியப் போகுது என்று மைம் கோபி சொல்லும்போது அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ராமராஜன் ‘இனிமே தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம்’ என்கிறார்.