சினிமா

’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்!

webteam

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா சிறைவைக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து, ’லட்சுமிஸ் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் கதை என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. பி.விஜய்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். யாக்னா ஷெட்டி, லட்சுமி பார்வதி கேரக்டரில் நடித்துள்ளார். இதில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது. இத்திரைப்படம் புதன்கிழமை வெளியாகிறது. 

இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக, படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விஜயவாடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பதாக இருந்தது. 

இதற்காக, கன்னாவரம் விமான நிலையத்தில் இறங்கி படக்குழு விஜயவாடா புறப்பட்டது. அப்போது அவர்கள் கார்களை மறித்த விஜயவாடா போலீசார், நகரத்துக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், ராம்கோபால் வர்மா, தயாரிப்பாளர் ராஜேஷ் ரெட்டி ஆகியோரை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் சிறை வைத்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தக்கூடாது என போலீசார் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேரத்துக் கும் மேலாக விமான நிலைய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரையும் இரவில் விமானம் மூலம் ஐதராபாத் துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ராம்கோபால் வர்மா, ’’சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது போலீஸ்காரர்களின் பணிதான். ஆனால் நாங்கள் ஏன், விஜயவாடாவுக்குள் நுழையக் கூடாது? என்று கேட்டபோது, அவர்களிடம் பதிலில்லை’’ என்றார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’லட்சுமிஸ் என்.டி.ஆர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருந்த ஓட்டல்கள் மிரட்டப்படுகின்றன. முதலில், ஐதராபாத் நோவோட்டல். இப்போது விஜயவாடாவில் உள்ள ஓட்டல். முன்பணம் செலுத்திய பின்னும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுத்துள்ளனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும், உண்மையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.