நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் சும்மா இருக்கவில்லை. தனக்குத் தெரிந்த அழகுக்கலை ரகசியங்களை யூடியூப் வழியாக ரசிகர்களுக்குக் கற்றுத்தருகிறார். அந்த வீடியோவுக்கு ஸ்கின்கேர் சீரிஸ் எனப் பெயிரிட்டுள்ளார். மேலும், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதனை ஷேர் செய்து உற்சாகப்படுத்தியுள்ளார்.
"ஹாய்... நான் மீண்டும் இன்னொரு வீடியோவுடன் வருவேன். உங்களுடன் எனக்குப் பிடித்த வாழைப்பழ முகக்கவசம் பற்றிச் சொல்லப்போகிறேன் " என்று கூறியுள்ள ரகுல், மூன்று நிமிடங்களுக்கு அந்த முகக் கவசம் செய்வது எப்படி என்பது பற்றி விளக்குகிறார். இது நாம் கொரோனாவைத் தடுக்க அணியும் முகக்கவசம் அல்ல. முக வசீகரத்திற்கான அழகுக்கலை ரகசியம்.
இந்த முகக்கவசத்தை அவர் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து செய்துகாட்டுகிறார். வாழைப்பழம் தனக்குப் பிடித்த பழம் என்று கூறும் ரகுல், அதில் பொட்டாசியம் இருப்பதால் உங்களுடைய முகத்திற்குப் பாதுகாப்பை அளிக்கும் என்கிறார். எலுமிச்சையின் நன்மைகளையும் விளக்கும் அவர், உங்களுடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதுடன், முகத்தின் நிறம் மாறாமல் இருக்கும் என்றும் டிப்ஸ்களை அள்ளித் தருகிறார்.
"வாழைப்பழ முகக்கவசம் வறண்ட சருமத்திற்கு நல்லது. உங்கள் முகச்சுருக்கங்களை நீக்கிவிடும். அதேநேரத்தில் உங்களுடைய வயதை இளமையாகக் காட்டும். நீங்கள் விரைவில் அதைப் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றும் அழகுக்கலை நிபுணராக ரசிகர்களுக்கு வழிகாட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.