2009ஆம் ஆண்டு 'வில்லு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில், விஜய் திடீரென கோபமடைந்து 'சைலன்ஸ்' என கத்தினார். அமைதியான விஜயின் இந்த நடத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில், அப்போது நிகழ்ச்சியில் ஏற்பட்ட சத்தம் காரணமாக விஜய் கோபமடைந்தார் என விளக்கம் அளித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லு. இப்படத்தில் விஜய் உடன் நயன்தாரா, ரஞ்சிதா, பிரகாஷ் ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தசூழலில் இத்திரைப்படம் சார்ந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அப்போது படம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த விஜய் திடீரென கோபப்பட்டு ‘பேசிட்டு இருக்கன், சைலன்ஸ்’ என கத்தினார். சில வினாடிகள் அமைதியாக இருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, மீண்டும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.
பொதுவாக அமைதியான சுபாவம் கொண்டவராக அறியப்படும் விஜய், பொதுவெளியில் கோபப்பட்ட மிக அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இது இன்றளவும் பேசப்படுகிறது. அப்போது விஜய் செய்தியாளர்கள் மீது கோபப்பட்டு கத்தியதாகப் பலராலும் சொல்லப்பட்டது.
இந்தசூழலில் தான் அப்போது என்ன நடந்தது என்று கூறியிருக்கும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ”விஜய் சார் சத்தம் போட்ட அந்த வீடியோ பார்க்கும்போது அங்கு என்ன நடந்தது என்று எனக்கு புரிந்தது. மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அங்கிருக்கும் சேர்களை எல்லாம் இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அங்கு யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள், நாம் நம் வேலையை பார்ப்போம் என்று தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். சேர்களை இழுத்துக்கொண்டிருக்கும் சத்தம் அவருக்கு அதிகமாக டிஸ்டர்ப் செய்துள்ளது. அந்த நச்சரிப்பு தாங்காமல் தான் அன்று அவர் சத்தமிட்டார்” என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.