ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம், நான்கு நாட்களில் ரூ.404 கோடி வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் சாதனையை நிகழ்த்தியுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `கூலி' ஆகஸ்ட் 14 வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் பெரிய குறை ஏதும் இல்லை. கடந்த ஆறு நாட்களில் இந்திய அளவில் படம் 200 கோடி வசூலை கடந்துள்ளது. உலகம் முழுக்க 404 கோடி வசூலித்துள்ளதாக ஆகஸ்ட் 18ம் தேதி அறிவித்தது சன் பிக்சர்ஸ்.
ஆனாலும் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்ப்பதில் ஒரு தடை உள்ளது. முதல் வாரத்தில் ரசிகர்கள், இளைஞர்கள் கூட்டம் வந்துவிட்டதால் வசூல் பெரிய அளவில் இருந்தது எனவும், இரண்டாம் வார துவக்கத்தில் வசூல் சற்று குறைய தொடங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய `கூலி' படத்தை சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் போன்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, கூலி அவ்வளவு வன்முறையான படம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் படத்தில் மிக வன்முறை என சொல்லப்படும் காட்சிகளை படக்குழுவின் அனுமதியோடு நீக்கிவிட்டு, படத்திலிருந்து 4 நிமிடங்கள் குறைக்கப்பட்டு மறு தணிக்கை செய்துள்ளனர்.
எனவே தணிக்கை சான்றிதழ் No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. 2 மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய `கூலி' படம் தற்போது 2 மணிநேரம் 44 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்திற்கு குழந்தைகள், கும்பங்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.