சினிமா

சொத்து வரி விவகாரம்: ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி

webteam

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரஜினிகாந்த் திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். 

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தரப்பில்  வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி நீதிபதியிடம் முறையிடப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் விரைவில் வழக்கை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.