சினிமா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்?

webteam

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் விரைவில் ரஜினி நடிக்க கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

ரஜினிக்கு சில வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அவரது இயக்கத்தில் ‘படையப்பா’, ‘முத்து’,‘லிங்கா’ உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் ‘ஜக்குபாய்’ படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் ட்ராப் ஆனது. அதனை சரிகட்டவே ‘கோச்சடையான்’ படத்தின் கதை பகுதிக்கு ரவிக்குமாரை துணைக்கு வைத்து கொண்டார் ரஜினி. மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பாரா ரஜினி என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. இளம் இயக்குநர்கள் பக்கம் ரஜினியின் கவனம் திரும்பவே ரவிக்குமார் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் ரஜினியை சந்தித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. இருவர் சந்திப்பின் போது ரவிக்குமார் ஒன் லைன் மட்டும் சொல்லி அனுமதி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

தற்சமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனை அடுத்து அவர் அரசியலில் மும்முரமாக இறங்குவார் என தமிழருவி மணியன் கூறி வரும் நிலையில் ரவிக்குமாரின் புதிய பட அறிவிப்பு வெளியானால் மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போகக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.