சினிமா

ரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா ? அசந்துப்போன ரசிகர்கள்

ரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா ? அசந்துப்போன ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி நடித்துள்ளார். பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை  லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை லைகா நிறுவனம் முன் வந்து விளக்கம் அளித்திருந்தது. ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததை போலவே வரும் 13ம் தேதி டீசர் வெளியிடப்பட உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

3டியில் டீஸரா அப்போது திரையரங்குகளில்தான் டீசரை காண முடியுமா என பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு லைகா நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. எந்தெந்த திரையரங்குகளில் டீசர் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், 3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடியூபிலும், 2D தொழில்நுட்பத்திலும் டீசர் வெளியாகும்" என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு இயக்குநர் ஷங்கர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார் "அதில் இந்த பிரம்மாண்டத்தை கொண்டு வர கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட புதிய போஸ்டரில் "முதல்முறையாக இந்தியாவில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துக்காக 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட திரைப்படம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 75 மில்லியன் என்பது கிட்டத்தட்ட 543 கோடி இதனால் அசந்துப்போன ரசிகர்கள் இந்தப் புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.