செய்தியாளர் - M.மீரா
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், தேவாவுடனான தனது அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தேவா கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத சொக்கத் தங்கம் என்றும், அவருடன் பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்தும் ரஜினிகாந்த் உருக்கமாகப் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனை நினைவுகூர்ந்த ரஜினிகாந்த், அந்தப் படங்களுக்கு இசையமைத்தது தனக்குப் பெரும் பாக்கியம் என்று தேவா கூறியதை நினைவுகூர்ந்தார்.
மேலும், ‘படையப்பா’ படத்தை உருவாக்கியபோது, சில நண்பர்கள் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைப்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். அப்போது தேவாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, அவர் எந்தவிதமான வருத்தமும் இல்லாமல், “தாராளமாகச் செய்யுங்கள்” என்று பெருந்தன்மையுடன் கூறியதாகத் தெரிவித்தார்.
தேவாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசிய ரஜினிகாந்த், அவர் தனது குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்று குறிப்பிட்டார். ஐந்து சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான தேவா, திருமணக் கச்சேரிகளில் இசையமைத்து உழைத்துப் பணம் சம்பாதித்து, தனது தம்பிகளின் குடும்பத்தைக் காப்பாற்றியதாகத் தெரிவித்தார். பின்னாளில் மிகப்பெரிய இசையமைப்பாளராக உயர்ந்த பிறகும், தனது சகோதரர்களைத் தன்னுடனேயே வைத்துப் பார்த்துக்கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இளையராஜா இசைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட, தேவா தனக்கென ஓர் இசைப் பாணியை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரஜினிகாந்த் கூறினார்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேவா தன்னிடம் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது குறித்துப் பேசியதாகவும், பின்னர் வெளிநாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் ரஜினிகாந்த் நினைவுகூர்ந்தார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு தேவாவைச் சந்தித்தபோது, இளைஞர்கள் தன்னை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும், “இதே சந்தோஷத்துல இன்னும் 10, 15 வருஷம் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்” என்று தேவா தன்னிடம் கூறியதாக நினைவுகூர்ந்த அவர், தேவாவின் மறைவு தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, தேவாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.