சினிமா

‘தர்பார்’ விவகாரம் எதிரொலி: குறைக்கப்பட்டதா ரஜினி சம்பளம்?

webteam

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படம் நஷ்டத்தை உருவாக்கி விட்டதாக ஒரு தரப்பு விநியோகஸ்தர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில்தான் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா, ‘தலைவர் 168’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதனை ‘சன்பிக்சர்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனிடையே ‘தலைவர் 168’ படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ‘தர்பார்’ திரைப்படம் தோல்வியடைந்தாக கூறப்படுவதால் அடுத்து வர உள்ள ‘தலைவர் 168’ படத்தில் ரஜினிகாந்தின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

சம்பளத்தை குறைப்பது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ரஜினியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் படி தயாரிப்பாளர் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான பேச்சில் சம்பளம் குறைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது சம்பளக் குறைப்பு தொடர்பான கோரிக்கையை கேட்டு ரஜினி அதிர்ச்சி அடைந்ததாகவும் பின் நிலைமையைப் புரிந்துக் கொண்டு சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் படி ரஜினிக்கு ‘தலைவர் 168’ படத்திற்காக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 58 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் படம் குடும்பக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் எனப் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். முதன்முறையாக ரஜினி படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.