சினிமா

''அண்ணாத்த படத்தின் கதை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது'' - சிவாவுடன் இணைந்தது குறித்து ரஜினி

கலிலுல்லா

அண்ணாத்த திரைப்படம் தன் வாழ்வில் மறக்க முடியாத படம் என்றும், படத்தின் கதையை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தில் இயக்குநர் சிவாவுடன் எப்படி கைகோர்த்தேன் என்பது குறித்து hoote செயலில் நடிகர் ரஜினிகாந்த் விரிவாக பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோவில், ''அனைவருக்கும் வணக்கம். பேட்ட படம் முடிஞ்சிருந்தது. நான் பார்த்தேன். அதுல ரொம்ப ஸ்டைலா காட்டியிருந்தாங்க. பேட்ட வெளியான அன்னைக்கு இயக்குநர் சிவா இயக்கியிருந்த விஸ்வாசம் படமும் ரீலீசாகியிருந்தது. ரெண்டு படமும் சூப்பர் ஹிட். ரெண்டு படத்துக்கும் நல்ல வரவேற்பு. சரி விஸ்வாசம் படத்த பாக்கணும்னு சொல்லி பாத்தேன். படம் நல்லாயிருந்தது.

இன்ட்ரவல் வந்தது. அப்போ இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் ஆக என்ன காரணம்னு யோசனை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாம் பாதி பாத்தேன். கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி கிளைமேக்ஸ் எக்ஸ்சலேண்டா இருந்தது. சூப்பர் படம். எனக்கு தெரியாமலேயே கை தட்டினேன். தயாரிப்பாளர் தியாகுவிடம் இயக்குநர் சிவாவை பார்த்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றேன். அவர் என் வீட்டுக்கு வந்தார். கள்ளங்கபடம் இல்லாத ஒரு குழந்தை மாதிரி உண்மையாக பேசினார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, எனக்கு எதும் கதை இருக்கிறதா? படம் பண்லாமா என கேட்டேன். ஹிட் கொடுக்கணும் என்றேன். அவர், உங்களுக்கு ஹிட் கொடுக்குறது ரொம்ப ஈஸி சார் என்றார்.

எப்டிசார் நம்பிக்கையா சொல்றீங்க என்று கேட்டேன். நல்ல கதையில நீங்க இருக்கணும் சார். பாஷா, அண்ணாமலை, தளபதி, முத்து, படையப்பா இதெல்லாம் நல்ல கதை அதுல நீங்க இருந்தீங்க அதனால படம் சூப்பர் ஹிட். நீங்க கிராமத்து கதாபாத்திரம் நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு சார். என்று அவர் சொன்ன விதம் என்னை ஈர்த்தது. நல்ல கத கொண்டுவாங்க என்றேன். 15 நாள் அவகாசம் கேட்டார்.

வீட்டுக்கு வந்தார். கதை சொன்னார். தண்ணீர் குடித்துக்கொண்டு கதை சொன்னார். தண்ணீர் என்றால் சாதாரணமான தண்ணீர்தான். நீங்கள் நினைப்பது போல அல்ல. கதை சொல்ல சொல்ல கிளைமேக்ஸில் எனக்கு தெரியாமல் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. நான் அவர் கையை பிடித்து சூப்பர் படம் என்றேன். இந்த படம் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள். சொன்னமாதிரியே சொல்லி அடித்துள்ளார். சிவா அன்ட் டீம்க்கு என் வாழ்த்துகள். அண்ணாத்த என் வாழ்வில் மறக்க முடியாத படம்'' என்றார்.